சென்னை: சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் கோல்ப் மைதானத்தை மூடுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்கக் கோரி மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் இயங்கி வரும் மெட்ராஸ் கோல்ப் கிளப் 1889ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. 1887ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் ஜிம்கானா கிளப் மற்றும் கோல்ப் கிளப் இணைந்து வணிக நோக்கத்துடன் இல்லாமல் கடந்த 147 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழக மதுவிலக்கு துறையிடம், கிளப்பின் உறுப்பினர்கள் மது அருந்த உரிமமும் பெறப்பட்டுள்ளது. கோல்ப் வீரர்களிடம் சந்தா பெற்று மைதானத்தை பராமரிக்க போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது வீரர்களுக்கு பயிற்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, உரிய கால அவகாசம் வழங்காமல் வாயில்களை மூடியுள்ளது விதிகளுக்கு எதிரானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவு குறித்த புகாரால் விசாரணைக் கைதிக்கு தனிமை சிறையா? - சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில், "அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலம் ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதிலிருந்து 75 ஏக்கர் நிலத்தை கோல்ப் கிளப்புக்கு தனியாக வழங்கவில்லை. ரேஸ் கிளப் உரிமத்திலேயே கோல்ப் கிளப் தொடர்ந்து செயல்பட்டுள்ளது.
தனியாக உரிமம் பெறாத கோல்ப் கிளப், தங்களுக்கும் உரிய நோட்டீஸ் வழங்க வேண்டும் என உரிமையாக கேட்க முடியாது. ஆகவே, ரேஸ் கிளப்பின் குத்தகை முடிந்ததும் உரிய கால அவகாசம் வழங்கிய பின் நடவடிக்கையை தொடர தமிழக அரசுக்கு செப்டம்பர் 29ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனால், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் தலையிட முடியாது. மேலும், ரேஸ் கிளிப் உரிமத்தில் செயல்பட்டு வந்த கோல்ப் கிளப்புக்கு தனியாக நோட்டாஸ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை" என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்