சென்னை: சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோயில் அருகில் அமைந்துள்ள இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிடக் கோரி, கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் அருகில் இறைச்சிக் கடை அமைக்கக் கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாதபோது நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பி இருந்தனர். பின்னர், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு இன்று தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ரமலான் ஸ்பெஷல்.. வீட்டிலேயே மணமணக்கும் சுவையான நோன்பு கஞ்சி செய்வது எப்படி?