சென்னை: மிகவும் பழமையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர், மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அளித்தார்.
அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும், அதற்கு செம்பனார்கோவிலைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அகோரம், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி T.V.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் தற்போது வரை தலைமறைவாக இருப்பதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மனுதாரர் தரப்பில், அகோரத்திற்கு எதிரான 47 வழக்குகளில் சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள வழக்குகள் அனைத்தும் மறியல், மேடைப்பேச்சு உள்ளிட்டவைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சாதாரண வழக்குகள் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை வாதத்தை ஏற்ற நீதிபதி, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.