சென்னை: சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர், பெர்முடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, அவரது மனைவி யோகலட்சுமி சென்னையில் வீடு தேடிய நிலையில், தனியார் ஹோம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன் என்பவர், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டை அவருக்கு காட்டியுள்ளார்.
ரூ.5 கோடி மதிப்பிலான வீட்டை வாங்குவதற்காக ஒப்பந்தம் பேசப்பட்டு, பல்வேறு தவணைகளில், வீட்டின் உரிமையாளர்களான மதுரிமா பால்சிங், கணவர் ராஜ்குமார் பால் சிங் மற்றும் மேலாளர்கள் மணிகண்டன், ஹரிராம் ஆகியோரிடம் ரூ.4.5 கோடி அளவிற்கு யோகலட்சுமி பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னரும், பத்திரப் பதிவு செய்து கொடுக்காததால், தொடர் போராட்டத்தின் காரணமாக வீட்டை பதிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால், யோகலட்சுமிக்கு விற்பதாக கூறப்பட்ட வீட்டில், ஜெயசிங் என்பவர் குடியிருந்துள்ளார். இதனால், யோகலட்சுமி மேலாளர்கள் மணிகண்டன் மற்றும் ஹரிராம் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் முறையாக பதில் அளிக்காததால், ரூ.4.5 கோடி மோசடி அடைந்ததை உணர்ந்த யோகலட்சுமி, கடந்த ஜனவரி மாதம், சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அந்த புகார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இது தொடர்பாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, பிப்ரவரி மாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை மேற்கோள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவையும் காவல்துறை நிறைவேற்றவில்லை என்று காவல்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் யோகலட்சுமி வழக்கு தொடர்ந்தார். அதில், “எழும்பூர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்குப்பதிவு செய்யவும், விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், பணம் வாங்கி மோசடி செய்ததாக மதுரிமா பால்சிங், ராஜ்குமார் பால் சிங், மணிகண்டன், ஹரிராம், ஜெய் சிங் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல், கூட்டுச்சதி ஆகிய நான்கு பிரிவுகளில் மார்ச் 25ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: '10 லட்சம் மக்களின் பட்டாசு தொழிலை நசுக்கியவர் மோடி' - அமைச்சர் தங்கம் தென்னரசு - LOK SABHA ELECTION