சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, அரசு நிலமாக வகை மாற்றம் செய்து, பின் அந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீண்டும் வனப்பகுதி நிலமாக அறிவிக்கக் கோரி திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், 'வனத் துறைக்கு சொந்தமான 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். 'பின்னர் அந்த தொழிற்சாலைகள் வசம் இருந்த அந்த இடத்தை தன் பெயருக்கு மாற்றியுள்ளார்' எனவும் ராஜ்மோகன் தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 'பாதுகாக்கப்பட்ட வனத்துறை நிலத்தை அரசு அனுமதியில்லாமல், வகைமாற்றம் செய்து பட்டா பெற்றது சட்டவிரோதமானது என்பதால், வனத் துறை நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும்' என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, வனப்பகுதி நிலம் எப்படி தனி நபருக்கு விற்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி, இந்த நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தை நேரில் சென்று ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களுடன் 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிடட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மணல் குவாரி முறைகேடு; தொழிலதிபர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட் உத்தரவு! - sand quarries scam case