சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? என அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாவட்டங்கள் முழுவதும் அதிகமான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாநில அரசின் விசாரணை அமைப்பு விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. அதனால் விசாரணையை மாற்று அமைப்புக்கு மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நினைத்தால் வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முக்கிய அரசியல் கட்சியினருக்கு நேரடி தொடர்பு உள்ளது. அதனால் தான் மாற்று அமைப்புக்கு விசாரணையை மாற்ற அரசு மறுப்பு தெரிவிக்கிறது என வாதம் செய்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றினால் என்ன தவறு? - நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு வாதம்!
அதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரின் பணியிடை நீக்கம் உடனடியாக திரும்ப பெறப்பட்டதற்கான காரணம் என்ன? துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ன விசாரணை நடத்தப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசாணையின் படி ஒரு மாதத்தில் விசாரனை அறிக்கை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது? அறிக்கை என்ன? கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மதுவிலக்கு துறை ஏன் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.