மதுரை: புதுக்கோட்டை கரம்பக்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர், புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், இந்த நீரை அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரும், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளரும் சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நீரின் மாதிரிகளை எடுத்து ஆய்விற்காக அனுப்பினர்.
அவர்கள் வழக்கை முறையாக விசாரிப்பதாக தெரியவில்லை. புதுக்கோட்டையில் இரட்டை குவளை முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. எனவே, புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதோடு, அந்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், இரட்டை குவளை முறை பயன்பாட்டைத் தடுப்பதோடு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்ட திருமண மண்டபங்களைப் பயன்படுத்தவும், வைராண்டி கண்மாயில் குளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஜூன் 5 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்கா த.வெ.க? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சீக்ரெட் உடைத்த நிர்வாகி!