சென்னை: பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையின் போது, 6 கிலோ எடையில் 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருளை பறிமுதல் செய்த மடிப்பாக்கம் போலீஸார் ஐடி நிறுவன ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மடிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் உயர் ரக கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (மே.14) அதிகாலை பல்லாவரம்-துரைப்பாக்கம் 200அடி ரேடியல் சாலையில் மடிப்பாக்கம் தலைமை காவலர் பெரிய கருப்புசாமி என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அப்போது ஆட்டோ ஓட்டி வந்த நபர் அனகாபுத்தூரை சேர்ந்த முரளிகிருஷ்ணா எனக் கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோவில் பின்புறம் அமர்ந்திருந்த நபரிடன் விசாரிக்கையில் அவர் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் (29) எனவும், பி.டெக் படித்து முடித்துவிட்டு சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விவரங்களை கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த லேப்டாப் பேக் மற்றும் சூட்கேஸை சோதனை செய்துள்ளார். அதில் உயர் ரக கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பசாமி, இதுகுறித்து உடனடியாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காவலர் பெரிய கருப்பசாமி பிடித்து வைத்திருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
அவரிடம் விசாரிக்கையில் அவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், டிப்டாப்பாக உடை அணிந்திருப்பதால் கையில் எது வைத்திருந்தாலும் போலீசார் அது என்னவென்று கேட்பதில்லை எனவும், அதனை பயன்படுத்திக் கொண்டு போதைப்பொருட்களை கடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு வெளி மாநிலங்களுக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அதை பல மடங்கு விலை உயர்த்தி சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ எடையுடைய கஞ்சாவனது, உயர் ரக கஞ்சா என்பதும், அதன் மதிப்பு 1.5 கோடி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.