தஞ்சாவூர்: தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று (நவ.27) புதன்கிழமை நடைபெற்றது. இதில், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கலந்துக்கொண்டு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர், மேடையில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது, “இலங்கையில் படுகொலைகள் நடைபெற்ற பிறகும் உலக நாடுகள் கண்டிக்க முன்வரவில்லை. கடந்த மாதம் பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை, போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. வங்கதேசம் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 1.50 லட்சம் மக்களைப் படுகொலை செய்த ராஜபக்சே கும்பலை கண்டிப்பதற்குஎந்த நாடும் முன் வரவில்லை. ஐ.நா.சபை மெளனம் சாதிக்கிறது. ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை என்ற தமிழ்ப்பெண், ராஜபட்ச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்று கூறியும், இந்தியா உள்பட எந்தவொரு நாடும் முன் வரவில்லை.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை" - இராமதாசு பதில்!
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சார்க் அமைப்பின் கூட்டத்தை இந்தியா நடத்த முடியவில்லை. இலங்கையில் தொடர்ந்து சீன அபாயத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், ஈழத் தமிழர்களுக்கு வந்திருக்கிற அபாயத்தை விட, இந்தியாவிற்கு வந்திருக்கிற பேராபத்தை டெல்லியில் இருப்பவர்கள் உணர மறுக்கிறார்கள். இந்தியாவை சுற்றி இருக்கிற நாடுகளில் இந்தியாவிற்கு உண்மையான நண்பனாக விளங்க கூடியது தமிழீழம் மட்டுமே. இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள். ஆனால், இதை டெல்லியில் உள்ளவர்கள் உணர மறுத்தால் விளைவு இந்திய மாக்கடல், சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடும்.
தமிழீழம் உருவானால் மட்டும் தான் தெற்கில் இந்தியாவிற்கு அபாயம் இருக்காது. இல்லையென்றால், அந்த அபாயம் நாளுக்கு நாள் பெரிதாகி தெற்கையே பாதுகாக்க முடியாத நிலைமை இந்திய அரசுக்கு ஏற்பட்டுவிடும் என்பதை அரசு உணரவில்லை. இலங்கை அரசை தாஜா செய்யும் வகையில் பணமாகவும், உணவாகவும், இந்தியா வாரி கொடுக்கிறது. தமிழீழ மக்களின் துன்பத்தை தொலைப்பதற்கான, விலங்கை உடைப்பதற்கான சூழல் நிச்சயம் பிறக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்