சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 'நீங்கள் நலமா?' என்ற திட்டத்தின் கீழ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து, அவர்களின் தேவை குறித்துக் கேட்டறிந்தார்.
அதன் பின்னர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு வகையான புதிய திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற திராவிட மாடல் ஆட்சியினை நடத்தி வருகிறார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பயன் பெற்றுள்ளவர்கள் ஏராளமானவர்கள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரை இன்று தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து, அவர்களின் தேவை குறித்து கேட்டறியப்பட்டது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம், 2,20,000க்கும் மேற்பட்ட விபத்துக்குள்ளானவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
கலைஞரின் வருமுன் காப்போம், இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்புத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவம், மக்களைத் தேடி ஆய்வகம் போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் ஒரு 5 பேரிடம் நீங்கள் நலமா என்ற திட்டத்தின் கீழ் இன்று நாங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகள் ஏதேனும் உண்டா என்றும் கேட்டறிந்தோம்" என்று தெரிவித்தார்.
மேலும், தொடர்ச்சியாக பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் நேற்றைக்கு சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், தங்கள் கல்லூரி முதல்வர் தங்களின் தாடியை மழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள். உடனடியாக, துறையின் செயலாளர் அந்த கல்லூரியின் முதல்வரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருந்தார்.
அந்த கல்லூரி முதல்வர் தேர்வு நேரம் என்பதால், பொதுவான அறிவுரைகளையே வழங்கினோம், அது மாணவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று விளக்கியிருந்தார். உடனடியாக துறையின் செயலாளர் 'Specific Instruction' யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி முதல்வர்களையும் இன்று (மார்ச் 6) காலை தொடர்பு கொண்டு. 15 சதவீதம் மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ், வெளிமாநிலங்களில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களின் உடை, உணவு, கலாச்சாரம், பண்பாடு போன்ற எந்த விஷயங்களிலும் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் காலிப் பணியிடங்களை எப்போது நிரப்பப்படும்? - மேயர் பிரியா பதில்!