சென்னை: சென்னை தியாகராய நகரில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளை ஒட்டி நேற்று, தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையங்கள் சங்கம் சார்பில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இதில் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கலந்துகொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாண்டிபஜார் காவல் ஆய்வாளர் புகழேந்தி கலந்து கொண்டார்.
மேலும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் கலந்து கொண்டு போதைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தி நகரில் உள்ள முக்கிய சாலையில் வழியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் மாணவர்கள் பேரணியாக சென்று போதை விழிபுணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாடலாசிரியர் சினேகன், “மது போதையில் இருந்து விடுவிக்கவும், மது மற்றும் போதையில்லா தலைமுறையை உருவாக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி இன்று நடைபெற்றது. மது இல்லாத தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் நாடு முழுவதும் இது போன்ற பேரணிகள் நடைபெறுகிறது. அனைவரும் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் தான் போதைபொருட்களில் இருந்து வரும் தலைமுறையை நேர்வழிப்படுத்த முடியும்.
அறம் சார்ந்த வழியில் எடுத்துச் செல்ல முடியும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டியது பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல்வாதிகள் மட்டும் கிடையாது. அனைவரும் அரசியல்வாதி தான். எல்லோரும் ஒத்துழைத்து அனைவரும் ஒரே நேர் கோட்டில் நின்றால் மதுப்பழக்கங்களை களைந்தெடுக்க முடியும். சமூகத்திற்கு ஒவ்வாத பிரச்சினைகளுக்கு சட்டங்களும், தண்டனைகளும் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறைகளா?- ஐஆர்சிடிசி விளக்கம் என்ன? - IRCTC