கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் இடம், சர்வதேச சுற்றுலா மையம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து முக்கடல் சங்கம் பகுதியில் கடலில் இறங்கிக் குளித்து விட்டு, சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியைக் கண்டுகளித்து வருகின்றனர்.
குறிப்பாக இன்று சூரியோதயத்தைப் பார்க்க ஆர்வம் காட்டிய சுற்றுலாப் பயணிகள், கடல் அழகையும் சூரிய உதயத்தையும் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். தொடர்ந்து கடலில் இறங்கி குளித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தருமபுரி.. அரசை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!
இதேபோல் காந்தி நினைவிடம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை நினைவகம், பத்மநாபபுரம் அரண்மனை, கேப் கொமோரின் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொழுதை மகிழ்ச்சியாக செலவிட்டுச் செல்கின்றனர். மேலும் கடற்கரை ஓரம் வைக்கப்பட்டுள்ள ஏராளமான கடைகளில் சங்குகளால் செய்யப்பட்ட கண்ணாடி, வீட்டிற்குத் தேவையான அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை: வரும் நாள்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் பாசிகள் அகற்றுவது, கடலில் இறங்கும் பகுதிகளில் உள்ள படி கற்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மேலும் கன்னியாகுமரி காவல்துறையினர் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.