வேலூர்: வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் அடுத்த கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாட்சி என்றழைக்கப்படும் முத்துகிருஷ்ணன். லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், இன்று (புதன்கிழமை) காலை லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு சத்துவாச்சாரி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், சத்துவாச்சாரி ஆவின் அருகே உள்ள சர்வீஸ் சாலை வந்த போது லாரி பழுதானதை அடுத்து, லாரியை அருகே உள்ள மெக்கானிக் ஷாப்பில் முத்துகிருஷ்ணன் நிறுத்தியுள்ளார். பின்னர், லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த போது, சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென முத்துகிருஷ்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்டதில் முத்துக்கிருஷ்ணனின் கைவிரல் துண்டானது. அதன் பின்னர், தாக்குதல் நடத்திய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணனை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஏரியூரில் கோயில் திருவிழாவில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பட்டப்பகலில் மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கோடம்பாக்கம் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்.. 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!