சென்னை: லண்டன் வாழ் தமிழர்களான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா ஆகியோர் இணைந்து நிருத்திய சங்கீத அகாடமி எனும் நடன மற்றும் இசை பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் தமிழக பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
இதற்காக லண்டனிலிருந்து 52 பரதநாட்டிய நடன மாணவர்களை அழைத்து வந்துள்ளனர். இந்த 52 பேரும் லண்டன் மற்றும் அதன் அருகே உள்ள மாகாணங்களைச் சேர்ந்த பூர்வீக தமிழர்கள் ஆவர். இவர்களின் மூலம் தஞ்சை பெரிய கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்துவது மட்டுமின்றி, பரதநாட்டிய கலையை மற்ற லண்டன் வாழ் தமிழர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே தங்கள் நோக்கம் என நிருத்திய சங்கீத அகாடமியைச் சேர்ந்த ராதிகா தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரவாயலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது மிகவும் கடினம் என பலர் தெரிவித்தனர். ஆனால், முறைப்படி அணுகிய போது தமிழக அரசும், அதிகாரிகளும் உரிய வகையில் இதற்கு அனுமதி அளித்தனர். அவர்களுக்கு நன்றி. எங்கள் குழுவினர் ஐரோப்பா, ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.
இருந்தாலும், தமிழகத்தின் சிதம்பரத்தில் நாங்கள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சியே மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதுமட்டுமின்றி, எங்கள் குழுவினரின் 20ஆம் ஆண்டை போற்றும் வகையில், தற்போது தஞ்சை பெரிய கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு எங்களது நடனத்தை சமர்ப்பணம் செய்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 2026 தேர்தலில் நான்கு முனை போட்டியை எதிர்பார்க்கிறோம்.. அண்ணாமலை பேச்சு! - annamalai criticize Mk Stalin