சென்னை: இன்ட்ராஹெபடிக் சோலாங்கியோகார்சினோமா என அழைக்கப்படும் ஒரு அரிதான கல்லீரலின் பித்தநாள புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு, எம்ஜிஎம் மருத்துவமனையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், அவர் தற்போது நலமாக உள்ளார்.
இது குறித்து, கல்லீரல் நோய் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சைக்கான எம்ஜிஎம் இன்ஸ்டிடியூட் இயக்குநர் தியாகராஜன் ஸ்ரீனிவாசன் மற்றும் இணை இயக்குநர் கார்த்திக் மதிவாணன் கூறும்போது, “போலந்து நாட்டைச் சேர்ந்த 31 வயதான ஒரு குழந்தை நல மருத்துவருக்கு பித்தநாள புற்று முற்றிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதற்கான சிகிச்சை பெறுவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டார். 2023ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் செய்யப்பட்ட சிடி மற்றும் எம்ஆர்ஐ சோதனையில், அந்த இளம் பெண் மருத்துவரின் கல்லீரலின் வலது மடலில் 8 x7 செ.மீ. என்ற ஒரு பெரிய அளவிலான திசு மாற்ற நைவுப்புண்ணும் மற்றும் இடது மடலில் ஒவ்வொன்றும் 3x2 செ.மீ. அளவுள்ள மூன்று சிறிய நைவுப்புண்களும் இருப்பது தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து, எம்ஜிஎம் மருத்துவமனையில் அரிதான கல்லீரல் பித்தநாள புற்றுக்கட்டிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. முதிர்ச்சியடைந்திருந்த பித்தநாள புற்றுநோயின் அளவையும், தீவிரத்தையும் வெற்றிகரமாக குறைப்பதற்கு 6 மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கமான அறுவை சிகிச்சை வழிமுறையின் மூலம் புற்றுக்கட்டியை அகற்றினால் எஞ்சியுள்ள கல்லீரல் பயன்படுத்துவதற்கு இயலாததாக ஆகிவிடும்.
ஆகவே, கல்லீரலைச் சூழ்ந்திருக்கும் பித்தநாளத்தோடு சேர்த்து புற்றுக்கட்டியை அகற்றுவதற்கு உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே விருப்பத் தேர்வாக இருந்தது. குறிப்பாக, இதன் தீவிரமான தாக்கும் தன்மையினால் கல்லீரலின் பித்தநாள புற்றுநோயில் சிக்கல்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன. இதன் காரணமாக, பல்முகட்டு சிகிச்சையுடன் உறுப்புமாற்று சிகிச்சைக்கான அளவைகளுக்கு உட்பட்டதாக இதை கொண்டு வருவது அவசியமாக இருந்தது.
அதன்பிறகு செய்யப்பட்ட கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையானது, அந்த காலஅளவிற்குப் பிறகு புற்றுகட்டி திரும்பவும் நிகழ்வதை குறைத்து வெற்றிகர சிகிச்சையாக நிறைவடைந்திருக்கிறது. அந்த பெண்ணின் கணவர், அவரது கல்லீரலின் வலது மடலை தானமாக வழங்கியிருந்த நிலையில், அதைக்கொண்டு அப்பெண்ணிற்கு உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
உயிருடன் உள்ள ஒருவரின் கல்லீரல் தானம் செய்யப்பட்டது. அநேகமாக இதுவே முதன்முறையாகும். இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் மீட்சி மிக வேகமாக இருந்தது. புற்றுநோய் திரும்ப வந்திருப்பதற்கான எந்த சான்றோ, அறிகுறியோ இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ஸ்மோக் பிஸ்கட்டுக்குத் தடை - உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி.! - SMOKE BEEDA SMOKE BISCUITS BAN