திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 831 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கும் வகையில் ரூ.605.75 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.
இதுபோன்று களக்காடு நகராட்சி, ஏர்வாடி, பணகுடி உள்பட 7 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ.423 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டப் பணிகளுக்காக முன்னீர்பள்ளம் மற்றும் சிங்கிகுளம் பகுதியில் குடிநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த
குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, "முன்னீர்பள்ளம், தாமிரபரணி ஆற்று பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு 831 கிரமங்களில் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட உள்ளது. சிங்கிகுளம் கிராமத்தில் சுத்திகரிப்பு மையத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
தண்ணீர் எடுக்கப்படக்கூடிய நீருந்து நிலையங்களின் 80% பணிகள் முடிந்துள்ளது. இந்த தண்ணீர் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட வேண்டிய 162 குடிநீர் தொட்டிகளில் 40 தொட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டது. 26 குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மீதம் 94 தொட்டிகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும், ஜனவரி மாதம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும். ஆகவே, ஊராட்சி ஒன்றியங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் மார்ச் 31 தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: "மதுவிலக்கு அமல்படுத்த மட்டும் தேசியம் வேண்டுமா?" - கிருஷ்ணசாமி கேள்வி!
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "களக்காடு நகராட்சி உட்பட 7 பேரூராட்சிகளுக்கு குடிதண்ணீர் கொண்டுவர சேரன்மகாதேவி பகுதியில் இருந்து புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடந்துவருகிறது. ஒருசில இடங்களில் மெதுவாக பணிகள் நடக்கிறது. ஒருசில இடங்களில் பணிகள் தொடங்கப்படவில்லை. ஒரு பேரூராட்சிக்கு 6 நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் அனைத்து பணிக்கும் திட்டம் தயார் செய்து பணிகளை தொடங்கவேண்டும். மே மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தனி குடிநீர் இணைப்பு மூலம் தாமிரபரணி தண்ணீர் 50 ஆயிரம் வீடுகளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 1.5 லட்சம் குடியிருப்புகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1028 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் அமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்