சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில், “ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என உள்ள பெயர் பலகையை அரசுப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள கள்ளர் சீரமைப்புப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பழங்குடியினர் நலப்பள்ளிகள் என அனைத்தையும் பள்ளிக் கல்வித்துறைக்கு கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும். பள்ளிகளை ஒருங்கிணைத்து பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வு, முன்னுரிமை, போன்றவற்றை சரி செய்ய 2 பேர் கொண்ட குழுவையும் அமைக்கலாம்” என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளை அரசுப் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஒய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையின் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திராவிடர் என்பது சாதிப் பெயரா?: இதுகுறித்து அறிவுச் சமூகத்தின் தலைவர் தமிழ் முதல்வன் கூறியதாவது, “ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அரசின் ஊதுகுழலாக மாறியுள்ளார். கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகளைக் களைய அமைத்த ஒரு நபர் குழுவின் பரிந்துரையில் ஆதிதிராவிடர் என்பது சாதிப் பெயர் என்றும், அதனால் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் என்று இருக்கக் கூடாது என்றும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். ஆதிதிராவிடர் என்பது சாதிப் பெயரென்றால் திராவிடர் என்பது என்ன?.
திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயரென்றால், ஆதிதிராவிடர் என்பதை மூத்த இனம் என்றல்லவா புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சாதி ஒழிப்புப்பேசும் சூத்திர முற்போக்காளர்கள் முதலில் சாதியத் தொகுப்பாக அடையாளம் காட்டுவது பட்டியலினத்தவர்களை தான். பட்டியலினத்தவர் உண்மையாக சாதியை ஒழிக்கவும் அதன் ஆதிக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளவும் இயக்கம் காட்டினால், அதைத்தான் சாதிய இயக்கம் என்று சூத்திர முற்போக்காளர்கள் முத்திரை குத்துவார்கள்.
கட்சிப் பெயரில் திராவிடம் இருக்கக் கூடாது: சாதியவாதிகள் ஒன்றுகூடினால் முற்போக்கு என்பதும், சாதிய அமைப்பிற்கு எதிரானவர்கள் ஒன்று கூடினால் சாதியக் கூட்டம் என்பதும் தமிழ்நாட்டின் சமூகநீதியாகும். அந்த வகையில்தான் ஒய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு ஆதிதிராவிடர் என்பதை சாதிப் பெயர் என்று சொல்லியிருக்கிறார். ஆதிதிராவிடர் என்பது சாதிப் பெயரென்றால் திராவிடர் என்பதும் சாதிப் பெயர்தானே; திராவிடர் கழகம் என்பது சாதியக் கழகம் ஆகாதா?.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சாதிய முன்னேற்றக் கழகம்’ ஆகாதா?. ஆக திராவிடம் எனும் பெயரில் சாதிகளைக் காக்கும் வளர்க்கும் இயக்கங்களை இவர்கள் நடத்தி வருவதை இவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். ஆகவே திராவிடம் எனும் பெயரையும் அனைத்துத் தளங்களிலும் நீக்கவேண்டும். எந்தக் கட்சிப் பெயரிலும் திராவிடம் எனும் சாதிப் பெயர் இருக்கக் கூடாது. அதற்காக போராடவும் தயங்க மாட்டோம்.
கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளுடன் இணைக்க கூடாது: ஒரு சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த சமூகத்தின் கல்வியை அழிக்க வேண்டும் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. கள்ளர் பள்ளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் சுவாமி சகஜானந்தர் போன்ற முன்னோடிகளால் உருவாக்கப்பட்டது. இந்த நலத்துறைப் பள்ளிகள் அந்த சமுதாய முன்னேற்றத்திற்காக அந்த சமூகத்தை சேர்ந்த முன்னோடிகளால் ஏற்படுத்தப்பட்டது.
அதனை நீக்குவது அந்த சமூகத்திற்கு செய்யும் இழப்பாகவே உள்ளது. சுமார் 1300க்கும் மேற்பட்ட கள்ளர், ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் அந்தப்பகுதியில் அருகமைப் பள்ளிகளாகவே செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளுடன் இணைந்தால் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்போது, அந்தப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் நெடுந்தூரம் சென்று படிக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளுடன் இணைக்க மாட்டோம் என நடப்புக் கூட்டத்தொடரிலேயே அரசு அறிவிக்க வேண்டும்” என்று தமிழ் முதல்வன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி பணியாளர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார் கூறும்போது, “சில தனி உரிமைகளோடு இயங்கும் சாதிகளற்ற அடையாளமாக உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை மற்றப் பள்ளிகளோடு இணைப்பது என்பது சமூக அமைப்பை சரி செய்ய முடியாத நிர்வாக இயலாமையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
மைய சமையலறை என்ற அறிவிப்பு, சமாதானப்படுத்த முடியாத சில சமையலர் தீண்டாமை பிற்போக்குவாதிகளின் எதிர்ப்புக்கு இணங்கி போவதாகவும், அதே நேரத்தில் எளிய மக்களின் அரசு வேலை வாய்ப்பை பறிப்பதாகவும் தனியார் முதலாளித்துவ சமையல் ஒப்பந்தங்களுக்கு வழிவகுப்பதாகவும் இருக்கிறது.
நீதியரசர் சந்துரு பரிந்துரை ஏமாற்றத்தை அளிக்கிறது: சாதி மனநிலையால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், அதிலிருந்து மீள்கின்ற வகையில் உளவியல் நல பயிற்சிகளை வழங்குவது, இதே போன்று சுயநல சாதித் தலைவர்களால் சீரழிந்து வரும் மாணவர் சமுதாயத்தை காத்து சீர்படுத்திட அறிவியல் பூர்வமான திட்டங்கள் வகுப்பது போன்ற பாதுகாக்கும் வகையில் பரிந்துரைகள் ஏதும் அறிக்கையில் இடம் பெறவில்லை.
அரசு நிர்வாகத்தில் குறிப்பாக பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் அமைச்சர், அவரின் நேர்முக உதவியாளர்கள், இயக்குநர் பதவிகள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், அவர்களின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகப் பணியிடங்கள் என அனைத்திலும் பட்டியலினத்தவர் உரிய பிரதிநிதித்துவத்தில் அமர்த்தப்படவேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இதுபோன்ற பரிந்துரைகள் ஏதுமின்றி நீதியரசர் சந்துரு பரிந்துரை எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
அதே நேரத்தில் சாதிக்கு ஒரு நிறம் என்று இந்து மாணவர்களுக்குள்ளேயே பாகுபாட்டைத் தூண்டி, வெறுப்புணர்வை வளர்க்கும், நிறக் கயிறுகள் கட்டும் முறைக்கு ஆதரவு தரும். சாதியின் பெயரால் லாபம் பெற்று வரும் சனாதன சக்திகளை கண்டிக்கிறோம். அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மாணவர்கள் நெற்றியில் திலகம் இட கூடாது என்பது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது" - வானதி சீனிவாசன் ஆதங்கம்! - Vanathi Srinivasan