திருச்சி:அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான திட்டத்துக்கு எதிரான வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட, ஐந்து திருக்கோயிலில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 542 கிலோ எடையுள்ள பல மாற்று (KDM , Non KDM) பொன்இனங்களைஉருக்கி, தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருச்சி சமயபுரம் கோயிலில் இருந்து பாரத ஸ்டேட் பேங்க் வங்கிக்கு உருக்கப்பட்ட தங்கம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஓய்வுப்பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, கே.ரவிச்சந்திர பாபு, மாலதி ஆகியோர் முன்னிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர், SBI வங்கி அதிகாரிகளிடம் தங்கத்தை ஒப்படைத்தனர்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட, ஐந்து கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பல மாற்று பொன்இனங்களை கோவிலுக்கு தேவைப்படும் நகைகளை தவிர மற்ற தங்கத்தை முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பைக்கு தங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய இழப்பு - மன்மோகன் சிங்கிற்கு கனிமொழி எம்பி, ரஜினி இரங்கல்!
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு, "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணி நியமனம் செய்தோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடரப்பட்டு, தடை பெறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்கில் தடையை நீக்கி, அந்த வழக்கை விரைந்து முடித்து, தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பை சட்ட ஆலோசனை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர். சென்னை திருப்போரூரில் உண்டியலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட செல்போன் விவகாரம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இது நாள் வரை நியமிக்கப்படாத அறங்காவலர் குழு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.