புதுக்கோட்டை: பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு அரசு திட்டங்களை இன்று திறந்து வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "கடந்த சில நாட்கள் பெய்த மழையில், தண்ணீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கு பெரிய ராட்சத மோட்டார்களை வைத்து அங்கே குழாய்கள் மூலமாக தண்ணீரை வெளியேற்றி எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத வண்ணம், விரைந்து செயலாற்றி, மக்களை வடகிழக்கு பருவமழையின் முதல் கட்டத்தில் இருந்து பிரச்சனையே இல்லாமல் காப்பாற்றி இருக்கின்றது தமிழக அரசு" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ஆளுநர் எப்போதும் ஏட்டிக்கு போட்டியாக தான் இருப்பார். திராவிடம் என்ற சொல் அவருக்கு வேப்பங்காயை போல இருக்கிறது என்பது இதிலிருந்து நன்றாக தெரிகிறது. ஆனால், ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது அவர் பிரிவினைவாத சக்திகள் என்று சொன்னார். 1962ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவிற்கும் அன்றைக்கு யுத்தம் வந்த நேரத்திலே திராவிட நாடு திராவிடருக்கே என்ற கொள்கையோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் திமுக.
ஆனால், இந்தியாவினுடைய ஒற்றுமையை கருதி இந்தியாவினுடைய நலனை கருதி இந்திய மக்கள் எல்லோரும் இந்திய பேரரசுக்கு பின்னாலே வலிமையோடு இருந்தால் தான் இந்தியா வலிமை உடைய வல்லரசாக இருக்க முடியும் என்பதற்காக எங்களுடைய திராவிட நாடு கொள்கையை இப்போது முக்கியமல்ல, எங்களுடைய முக்கியம் இந்தியாவினுடைய பாதுகாப்பு என்று தீர்மானம் போட்டது பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதியே ஆவர்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆயிரம் போஸ்ட் அனுப்பிய திராவிடர் விடுதலைக் கழகம்!
எனவே ஒற்றுமை என்பதிலேயே எங்களுக்கு ஈடு இணையாக யாரையும் பார்க்க முடியாது. பிரிவினைவாத சக்தி என்பது எங்களிடத்திலே துளிகூட கிடையாது. ஆளுநர் கற்பனையினாலேயே இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று பதிலளித்தார்.
இதனை அடுத்து இணையவழி குற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர், "இணையவழி குற்றங்களை தடுக்க வேண்டியது மத்திய அரசுதான். அது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் கிடையாது. இணையவழி குற்றங்களை பொறுத்தவரையில், மாநில அரசு முடிந்த அளவு தான் தடுக்க முடியும். ஒரு எல்லைக்கு மேலே போக முடியாது.
ஒருவர் வேறு மாநிலங்களில் இருந்துகொண்டு, தமிழகத்தில் இணையவழி குற்றங்களில் ஈடுபடுகிறார் என்று சொன்னால் அவரை அங்கே போய் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு மாநில அரசுக்கு குறைவு. ஆனால், அதை மத்திய அரசு, மாநில அரசோடு ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் தடுக்க முடியும். மாநில அரசு தன்னுடைய சக்திக்கு உட்பட்டு இணையவழி குற்றங்களை தடுத்துக் கொண்டிருக்கிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்