கோயம்புத்தூர்: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், தங்களுக்குச் சொந்தமான சொத்தை கோவை சிங்காநல்லூர் அதிமுக எம்ஏல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆக்கிரமித்த சொத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
இது குறித்து புகார் அளித்தவர்கள் கூறியதாவது, “எங்களது பாட்டனார் பெயர் காளிக்கோனார், அவருடைய பல கோடி ரூபாய் சொத்தைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக அவருடைய வாரிசுகளான நாங்கள் இங்கே வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்தை மோசடி செய்து அபகரித்து விட்டனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அவருடைய உறவினர் மணிகண்டன், இவர்களுடன் சேர்ந்து ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகிய மூன்று தரப்பும் சேர்ந்து தங்களுடைய சொத்துக்களைத் திட்டமிட்டு மோசடி செய்து ஏமாற்றி விட்டனர்.
இதுகுறித்து பல இடங்களில் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இருப்பினும், 'ஸ்ரீ சக்தி கார்டன்'' என்ற பெயரில் தங்களது வீட்டு மனைகளை விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதனைத் தடுக்கக் கோரி புகார் அளித்து உள்ளோம். மேலும், இதனை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்றால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால், அதிமுக எம்எல்ஏ கேஆர் ஜெயராமன் மற்றும் அவரது உறவினர்கள் தான் பொறுப்பு. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும், எங்கள் பூர்வீகச் சொத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக சிங்காநல்லூர் அதிமுக எம்ஏல்ஏ ஜெயராமன் விளக்கம் அளித்தால், அது தொடர்பான செய்தியையும் வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: விஜயின் அரசியல் வருகை.. அதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்த மாஜி அமைச்சர்!