கோயம்புத்தூர்: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (பிப்.4) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இதேபோல், கேரளா மற்றும் தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் தலைமையில், கேரள மாநிலத்திலும், தமிழகத்திற்கான மாநாடு கோவையிலும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளை முடுக்கிவிடும் வகையில், தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் இன்று நடைபெற உள்ளது.
மேலும், வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமை மற்றும் நாடாளுமன்றக் குழு அறிவிப்பார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரும்பி கோவையில் போட்டியிட்டால், அதற்கான வேலைகளை செய்யத் தயாராக உள்ளோம். 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகள் பெற்றதோடு, கன்னியாகுமரி மற்றும் தருமபுரியில் வெற்றி பெற்றது. எனவே, மூன்றாவது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வர முடியாது என்பது பொய்யாகி உள்ளது.
நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், நடிகர் விஜய் கட்சி துவங்கினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறவில்லை என்றும், 2026-இல் பணிகள் வேகம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய தேர்தலைக் கண்காணிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்லார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனை குறித்து கேட்டதற்கு, தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மீது, தமிழக காவல்துறை எந்த வித நடடிக்கையும் எடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து கண்காணித்த பிறகே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு, அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
என்.ஐ.ஏ என்பது தேசத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை. நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களைக் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உள்ளது. அந்த அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது” என பதிலளித்தார்.
இதையும் படிங்க: தப்பியோடிய போக்சோ வழக்கு கைதி: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு