தூத்துக்குடி: புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 400க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார். தமிழ்நாட்டில் பாஜக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறும்" என்று எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, "மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமையாக தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காவல் துறையினர் இரண்டு நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீதும், தாய் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குற்றவாளிகளை பாதுகாப்பது தமிழக காவல் துறைக்கு அழகல்ல, இந்த சம்பவத்தில் காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
யூடியூப்பில் ஏதாவது தகவல் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபரை அதிகாலை இரண்டு மணிக்கு கைது செய்யும் காவல் துறை, இந்த இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்?
2014 ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதாரம், கடந்த 10 ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2027க்குள் 3வது இடத்தை அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கேரண்டி கொடுத்துள்ளார். இந்த இலக்கை நிச்சயம் நாம் அடைவோம்" என்று எல்.முருகன் கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில்.. விரைந்து இயக்க கோரிக்கை! - Thoothukudi Train Service