தூத்துக்குடி: புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் அளித்த பேட்டியில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களைக் கைப்பற்றி மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி வரலாற்றுச் சாதனை படைப்பது உறுதி ஆகிவிட்டதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தது தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை எனவும், மகான் மற்றும் ஞானி பிரதமராக கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இது இந்த தேசத்திற்கு ஆன்மீக பூமிக்கு பெருமை என பெருமிதம் தெரிவித்த அவர், பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற போகிறதாகவும், அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தோல்வி விளிம்பில் இருந்து கத்திக் கொண்டிருக்கிறார் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வெறுப்பின் உச்சத்தில் இருந்து கொண்டு வெறுப்பின் அடையாளமாக விசிக தலைவர் திருமாவளவன் பேசுவது வெட்கக்கேடு எனவும், இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், அந்தக் கூட்டணி எதற்கும் லாயக்கு இல்லை எனத் தெரிந்ததால் தான் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கூட்டத்திற்குச் செல்லவில்லை என விமர்சனம் செய்தார்.
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும், காவலர் பேருந்தில் டிக்கெட் எடுக்காத விவகாரத்தில் உள்துறை செயலாளரும், போக்குவரத்து இணைச் செயலாளரும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்: ஆவேசமடைந்த அண்ணாமலை! - Bjp Annamalai