சென்னை: பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக யுடியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெண் காவலர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் யுடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் சென்னை புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கரை கன்னியாகுமரி அழைத்து வந்தனர். அதிகாலை நாகர்கோவில் அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் நாகர்கோவிலில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் காவல் துறை வாகனம் மூலம் பெண் போலீசாரின் பாதுகாப்புடன், குழித்துறை நீதிமன்றம் 1-ல் நீதிபதி மோசஸ் ஜெபசிங் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இதில், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். தொடர்ந்து, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள், முன்னதாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி வாதாடினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மோசஸ் ஜெபசிங், பல்வேறு நிபந்தனைகளுடன் சொந்த ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, போலீசார் சவுக்கு சங்கரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்போது சவுக்கு சங்கர் செய்தியாளர்களை பார்த்து , “திமுக அரசு என்னை கண்டு அஞ்சுகிறது. உதயநிதி ஸ்டாலின் என்னை கண்டு அஞ்சுகிறார். ஆதலால் தான் தினந்தோறும் என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன” என்று ஆவேசமாக பேசினார். முன்னதாக, குழித்துறை நீதிமன்ற வாளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பி.இ., பி.டெக். படிப்பில் சேர போன் வந்தால் நம்பாதீங்க..! தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை! - bE and BTech admission fake calls