சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்ட நிலையில், அந்த பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை ராஜினாமா கடிதம் அனுப்பிய நிலையில், அதை ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் போது கட்சி சார்பாக எதுவும் செய்ய முடியாது. நான் கட்சிக்காக உழைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆகவே, எனது பதவியை ராஜினாமா செய்தேன்.
எனது கவனம் முழுமையாக அரசியலாகவே இருக்கிறது, பாஜக கட்சிக்காக வேலை செய்வதே திருப்தியாக இருக்கிறது. வேறு ஒரு பதவிக்காக பேரம் பேசி ராஜினாமா செய்யவில்லை, பிரதமருக்காகவும், பாஜகவிற்காகவும் ஆதரவாக எங்கும் பேச முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழல் உருவானது.
இனி கட்சி சார்பாக எங்கெங்கு குரல் கொடுக்க வேண்டுமோ, அங்கெல்லாம் என் குரல் இருக்கும். அதேபோல், கட்சிகாக எங்கு செல்ல வேண்டுமோ அங்கேல்லாம் செல்வேன். கடந்த பத்தாண்டுகளாக பாரத தேசம் முன்னேறி உள்ளது. 2047இல் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளர்ந்திருக்கும் நாடாக இந்தியாவை முன்னேற பிரதமர் வழிவகுத்து வருகிறார்.
நான் முன்னேறி என்ன செய்யப் போகிறேன், நாடு முன்னேறினால் தான் நமது குழந்தைகள் அவர்களுடைய தலைமுறைகள் முன்னேறும், மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, சத்தியமா தெரியவில்லை. என்னை யாரும் ராஜினாமா செய்யக் கூறவில்லை. நானாக முன்வந்து தான் ராஜினாமா செய்தேன். ஆனால், பாஜக மேலிடத்தில் ஒப்புதல் பெற்று தான் ராஜினாமா செய்துள்ளேன்.
தன்னைப் பற்றி சமூக வளைத்தளங்களில் திமுகவினர் அவதூறு பரப்புவது, அவர்களின் பயத்தை காண்பிக்கிறது. கட்சி சார்பாக நான் பேசப்போகிறேன் என்பதால், என் பெயரை பார்த்தாலே திமுகவினர் பயப்படுகிறார்கள். அந்த பயத்துடன் நடுங்குவது நல்லது தான். இனிமேல் தான் விளையாட்டு ஆரம்பமாகிறது” என்றார்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, “ஹிண்டர்பர்க் விவகாரத்தில் பிரதமரை எதிர்க்கிறோம் எனக் கூறி காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்திய நாட்டிற்கு விரோதமாக செயல்படுகிறார்கள், அது தவறாகும். பொருளாதாரத்தில் இந்திய நாட்டை தடுமாறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
மேலும், இவ்விவகாரத்தில் வெளிநாடுகளுக்கு உதவும் வகையில் எதிர்கட்சிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தேசியக் கொடி வாகனப் பேரணிக்கு எப்படி தடை விதிக்க முடியும்? தேசியக் கொடி வாகனப் பேரணியில் நீதிமன்றம் தேசிய சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி வாகனப் பேரணி தடையை நீக்கியுள்ளது. தமிழகத்தில் தேசிய எண்ணங்களுக்கு விரோதமான சக்தி திராவிடம் தான்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பூ!