கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மிக பின்தங்கிய நிலையை அடைந்தது குறித்தும், கூட்டணி விவகாரம் குறித்தும், பல சர்ச்சையான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் அதிமுக என்னும் கட்சி பிளவுபட்டிருப்பதை ஒன்றிணைக்கப் போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி சசிகலா, தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் எனத் தனி அணிகளாக இருப்பவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் ஒருங்கிணைப்பு குழு குறித்து ஜூன் 14ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு அதிமுக சார்பாகப் பதில் சொல்ல வேண்டுமா? என விமர்சனம் செய்தார்.
மேலும் ஒருங்கிணைப்புக் குழுவில் கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் இருக்கிறார். அவர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்த போது கட்சியில் சேர்க்கப்பட்டவர். அதற்கு முன் கட்சியிலேயே இல்லாதவர் அதற்குப் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர், இந்த நபர் ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றியும், ஒருங்கிணைப்புக் குழுவைப் பற்றியும் அவதூறு கருத்துகளைத் தெரிவித்தற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 20 நாட்களில் புதிதாக நான்கு மாநகராட்சிகள் உதயம்"- அமைச்சர் கே.என்.நேரு