கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த செக்கிலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (26). இவர் பேளகொண்டப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலைக்குச் சொந்தமான சுந்தரம் ஆட்டோ கிளேட்டன் என்னும் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு வாட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடியதாகக் கூறி, தொழிற்சாலையினர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நவீன் உயிரிழந்துள்ளார். ஆனால், அதை சில மணிநேரத்திற்குப் பிறகே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வனத்துறையில் அவுட் சோர்சிங் முறையை ஏன் அரசு கைவிட வேண்டும்? வேட்டைத் தடுப்பு காவலர்கள் கூறுவது என்ன?
அதனால் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் 100க்கும் அதிகமானோர், தனியார் தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய விசிக நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் கி.செந்தமிழ், “நவீன் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர் உயிரிழந்த நவீனின் உறவினர்களிடம் 5 மணிநேரமாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உயிரிழந்த நவீன் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணியை பரிசீலிப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியதை தொடர்ந்து, நவீனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து மத்திகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.