சென்னை: இந்தியாவின் முதல் மாநகராட்சி என்று பிற மாநில மக்களால் அறியப்படும் நாட்டின் 5வது பெருநகரம் சென்னை. இங்கு 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பிழைப்புத் தேடி வருவோரை மொழி, மதம், என எந்த வேறுபாடின்றி அரவணைக்கிறது சென்னை.
இங்கு உயர்நீதிமன்றம், எழும்பூர் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி மருத்துவமனை, விக்டோரியா மஹால், ஜார்ஜ் கோட்டை உள்ளிட்ட பல வகையான வசதிகள் சென்னையை பெருமைப்படுத்துகின்றன. காலம் மாற மாற சென்னையும் மாறிக்கொண்டே தான் இருக்கின்றது.
அதேபோல் இயற்கையும் சென்னையை விட்டு வைக்கவில்லை. அதுவும் தன்னுடைய பங்கிற்கு ஒவ்வொரு ஆண்டும் மழை, புயல், வெள்ளம் என கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த மாதிரி இயற்கை பேரிடரால் சென்னை ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக இயற்கை பேரிடரால் குடிசைகளில் வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதைப் பார்த்த அப்போதைய முதலமைச்சர் அண்ணா இவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமென எண்ணி திட்டமிட்டு ஒவ்வொரு மழை - புயல் காலங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தார். பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதனை குடிசை மாற்று வாரியம் என திட்டமாக விரிவுபடுத்தினார்.
குடிசை மாற்று வாரியம் முதலில் வட சென்னை பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டது. அதன்பின் சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அந்தவகையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கே.பி.பூங்கா எனப்படும் கேசவப் பிள்ளை பூங்கா பகுதி, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த 1980 ஆம் ஆண்டு 280 சதுரடியில் 1,536 குடியிருப்புகள் கட்டப்பட்டு சாதாரண கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த குடியிருப்புகள் பழுதடைந்ததையொட்டி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியிருந்தவர்களை அருகாமையில் இருந்த தகர கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், இதனை மறு கட்டுமானம் செய்ய தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாடு வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.112.60 கோடி செலவில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இங்கு பன்னடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
பின்னர் இங்கு புளியந்தோப்பு பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அரும்பாக்கம், ஆடுதொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குடிசையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணமாக அவர்களை தங்க வைக்கும் வகையில் 13 மாடிகள் வரை கட்டடம் கட்டப்பட்டு சுமார் 2000 குடும்பங்கள் கே.பி பூங்கா குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இங்கு வாழும் மக்கள் ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குடியிருப்பு வாசி மகேந்திரன் கூறுகையில், "கே.பி.பூங்கா கட்டடம் தரமற்ற முறையிலும், சுவர்கள் சிதிலமடைந்தும் உள்ளது. மேலும், குடியிருப்பைச் சுற்றி கழிவுநீரும், குப்பைகளுமாகவே இருக்கிறது. சாக்கடை மூடிகள் உடைந்தும், திறக்கப்பட்டும் ஆபத்தான முறையில் இருப்பதால் யாரேனும் தவறி விழுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
மேலும், Maintenance Charges என்ற பெயரில் மாதத்துக்கு ஒரு வீட்டிற்கு ரூ.750 வாங்கியும் எந்த ஒரு அடிப்படை வசதியும் அரசு செய்தரவில்லை. இந்த கட்டடத்தில் லிஃப்ட் எப்போதும் வேலை செய்யாது. மேலும், இந்த நகர்ப்புற வாரியம் ஆரம்பித்ததன் நோக்கமே குடிசைகளில் உள்ளவர்களை கான்கிரீட் விடுகளுக்கு மாற்றி அவர்களுக்கு நல்ல குடிநீர், மின்சார இணைப்பு, பாதுகாப்பு இவை அனைத்தையுமே ஒன்றாக வழங்குவதே நோக்கமாகும். ஆனால் இவர்கள் தங்கள் நோக்கத்தை கூட சரியாக செய்யமாட்டேன் என்கிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் இளைஞர் பிரபு கூறுகையில், "கே.பி. பூங்கா குடியிருப்பில் வசிக்கும் 2000 குடும்பங்களுக்கும் ஒரே ஒரு விளையாட்டு திடல் மட்டுமே உள்ளது. இந்த விளையாட்டு திடல் மிகவும் சிறியதாகவும் பாரமரிப்பு இல்லாமல் சுகதாரமற்ற முறையில் உள்ளது. விளையாட்டு திடல் முழுவதும் குப்பைகள் நிறைந்து இருப்பதால், திடலில் விளையாட முடியாமல் சிறுவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஒரு சிறிய விளையாட்டு திடலில், கிரிக்கெட், கால்பந்து, கபடி, உள்ளிட்ட அனைத்து விளையாட்டும் விளையாடுவதாகவும், விளையாட்டு திடலில் வேலி உடைந்து இருப்பதால் நாய்கள், மாடுகள் உள்ளே நுழைந்து அசுத்தம் செய்துவிடுவதால் விளையாட முடியவில்லை" என்று அந்த இளைஞர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: ஆட்டோ சவாரி வருமானத்தை நிவாரண நிதியாக கொடுக்கும் சென்னை பெண் ஒட்டுநர்! - Woman Auto Driver Fund to Wayanad