திருநெல்வேலி: மனித கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளத்தில் இன்று (டிச.07) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
கூடங்குளம் அருகே மனித கழிவு மேலாண்மை திட்டத்திற்கான டெண்டர் விடும் பணியை தொடங்கினால் கடையடைப்பு மற்றும் ஊர் பொது மக்களை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சியரிடம் கோரிக்கை மனு:
திருநெல்வேலியில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும், அதன் கீழ் 204 ஊராட்சி மன்றங்களும் செயல்பட்டு வருகிறது. இதில், கூடங்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் வின்சி மணியரசி. இவரது தலைமையில் கூடங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் 20க்கும் மேற்பட்டோர், நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடை ஏற்படுத்தும் வகையில் மனித கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்பட உள்ளதால் அத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை மீனவர்களை மாபெரும் ஆபத்து நெருங்குகிறதா? கூடங்குளத்தில் நடப்பது என்ன?
அவர்கள் அளித்த மனுவில், “நெல்லை, ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடங்குளம் ஊராட்சி பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் வடக்கு பகுதியில், கூடங்குளம் கிராம குடிநீர் ஆதாரம், அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பொது மருத்துவமனை, அணுமின் நிலையத்தின் நிர்வாகம் அமைத்த அணுசங்கமம், திருமண மண்டபம், வழிபாட்டு தலங்கள், விவசாய விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளது.
சுத்திகரிப்பு நிலையம்:
மேலும், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் வசதிக்காகமார் 1.5 ஏக்கரில், சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 3 கோடி மதிப்பில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மனித கழிவு மேலாண்மை திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பூர்வாங்கப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
நிலத்தடி நீர் பாதிப்பு:
கூடங்குளம் பகுதியில் மனிதக் கழிவுகள் அதிக அளவு சேராத நிலையில், மாவட்டத்தில் உள்ள மற்ற மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளை, கூடங்குளம் பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது முறையானது அல்ல. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ஏற்படும் சூழல் உருவாகி கூடங்குளம் பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: கவரப்பேட்டை ரயில் விபத்து: "குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்" - ரயில்வே டிஜிபி தகவல்!
எனவே, மாவட்ட நிர்வாகம் மனிதக் கழிவு மேலாண்மை மையத்தை, கூடங்குளம் ஊராட்சியில் அமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக டெண்டர் விடும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டால், வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சனிக்கிழமை வியாபரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தவும், பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடையடைப்பு போராட்டம்:
இந்நிலையில், டெண்டர் விடும் பணிகள் ரத்து செய்யப்படாமல், தொடர்ந்து நடைபெற்று வருவதால், கூடங்குளம் பகுதி முழுவதும் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரித்து வருகின்றனர். கூடங்குளம் பகுதியில் பல்வேறு கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.