சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டிற்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) தாக்கல் செய்தார். இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
பட்ஜெட் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், "கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன். இந்த நிதிநிலை அறிக்கை அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் டெல்டா தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கையான அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 'காலை உணவுத் திட்டம்' நீட்டித்து இருப்பதை வரவேற்கிறேன். ஆனால், அதே நேரத்தில் ஒரு வளாகத்தில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும்.
மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பையும் வரவேற்கிறேன். அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை வரவேற்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் சிறப்பாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள்: காவிரி முதல் வைகை வரை பட்ஜெட்டில் அறிவிப்புகள்!