கரூர்: கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் அருகே வாங்கல் காட்டூர் பகுதியை சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக, பாதிக்கப்பட்ட பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜீன் 13ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
மனுதாரர் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதால், பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல், மோசடி செய்தல் 147, 294(b), 323, 324, 365, 506 (ii) உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு எழுதிக் கொடுத்த ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்தை, அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் பெற்று, பத்திரப்பதிவு மேற்கொண்ட விவகாரத்தில், காஞ்சிபுரம் ரகு, ஈரோடு சித்தார்த்தன், கரூர் மாறப்பன், செல்வராஜ் ஆகியோர் மீது மோசடி செய்து பத்திரம் பதிவு செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இயங்கும் சிபிசிஐடி ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான போலீசார், போலி ஆவணங்களை தயாரித்து நூறு கோடி சொத்தினை அபகரிக்க முயன்றது குறித்து, ஆவணங்களை சேகரித்து வருவதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, கடந்த ஜூன் 25ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட ஏழு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையயத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் வழக்கில் சேர்க்கப்படாத நிலையில், தற்போது அவர் மூது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "படித்தவர்களைவிட அர்ப்பணிப்பு உணர்வுள்ளவர்கள் தான் அரசியலுக்கு தேவை" - நடிகர் விஜய்க்கு வானதி சீனிவாசன் பதிலடி!