புதுக்கோட்டை: கறம்பக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 20 புதிய கட்டடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் எம்பி எஸ்.ஜோதிமணி பேசியதாவது “ தமிழகத்தின் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை அதிகமாக வர தொடங்கியுள்ளது. எனவே, அரசு புற்றுநோயை குணப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோயை கண்டறிய திட்ட மதிப்பீடு தாயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது இந்தியா அளவில் உள்ள மருத்துவத்துறையில் மைல்கல்.
இதையும் படிங்க: காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரை வரவேற்று கேரளாவில் பேனர்!
போதைப் பொருள் : போதைப் பொருள் குறித்து பேசினால் ராகுல் காந்திக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. போதைப் பொருள் எங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறதோ அங்கையே நிறுத்தப்பட வேண்டும். போதைப் பொருள் தடுப்பது குறித்து பாஜக ஏன் மௌனமாக இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் தான் இதற்கு விடை அளிக்க வேண்டும். இருப்பினும், தமிழக அரசு எல்லைகளிலேயே போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவின் பி டீம் பகுஜன் சமாஜ் கட்சி: பாஜகவின் பி டீமாக மட்டும் அல்ல பாஜகவின் அங்கமாக பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. பாஜகவின் குரலாக தான் பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா முழுவதும் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இனி பாஜகவாக தான் செயல்படும். அதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சியினரின் குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது.
மது ஒழிப்பு மாநாடு: மது ஒழிப்பு மாநாடு திருமாவளவன் நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து 2026 தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்கும். நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்திக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் பின்னால் இருந்தது.தற்போது மருத்துவ கட்டமைப்பு வசதிகள், வென்டிலேட்டர் வசதிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது” இவ்வாரு அவர் தெரிவித்துள்ளார்.