கரூர்: கரூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணன் என்பவரிடம் வியாபார பெருக்கத்திற்கு விளம்பரம் செய்து தருவதாக ரூ.7 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படும் சவுக்கு இணையத்தின் ஊழியர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக, கிருஷ்ணன் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் சவுக்கு இணையதள ஊழியர் விக்னேஷை கைது செய்து கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சவுக்கு சங்கர் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால், கடந்த ஜூலை 9ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து போலீஸ் காவலுடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக ஏழு நாட்கள் போலீஸ் காவல் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட வேண்டும் என காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், ஜூலை 13ஆம் தேதி முதல் இன்று வரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் சவுக்கு சங்கரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல கரூர் நகர காவல்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று போலீஸ் காவல் முடிந்து கரூர் குற்றவியல் நடுவர் எண் 1-ல் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவலை ஜூலை 23ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறைக்கு உரிய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து, இது தொடர்பாக சவுக்கு சங்கரின் கரூர் நீதிமன்ற வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் கரிகாலன் அளித்த பேட்டியில், “சவுக்கு சங்கர் மீது இதுவரை காவல்துறை 27 பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஒரே ஒரு வழக்கில் மட்டும் இதுவரை பிணை பெற்று இருந்தாலும் சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வதற்கு காரணம் சவுக்கு சங்கர் தான் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது பல்வேறு வழக்குகள் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சர்க்கரை நோயாளியாக உள்ள சவுக்கு சங்கருக்கு இதுவரை புழல் சிறை நிர்வாகம் சார்பில் உரிய மருந்து மாத்திரைகள், சரியான மருத்துவ உணவு ஆகியவை வழங்கப்படவில்லை.
கரூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 9ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டபோது சவுக்கு சங்கர் எழுத்துப்பூர்வமாக நீதிபதி முன்பு தனக்கு சர்க்கரை மாத்திரைகளும், உரிய உணவும் வழங்க வேண்டும் என்று கூறியதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்ததில் இயல்பை விட சர்க்கரை அளவு ரத்தத்தில் 400 என்ற அளவு இருந்தது. அதன் பின்னர் கரூரில் தான் மருந்து மாத்திரைகள் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “செந்தில் பாலாஜி இருப்பதால் சவுக்கு சங்கருக்கு தேவைகள் மறுப்பு”.. புழல் சிறை குறித்து வழக்கறிஞர் தகவல்!