ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அடுத்து உள்ள குமிட்டாபுரம் வனப்பகுதியில் யானையைக் கொன்று அதன் தந்தங்களை திருடியதாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொம்மன் (53) eன்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேடுதல் வேட்டை: குமிட்டாபுரம் வனப்பகுதியில் காட்டு யானையைக் கொன்று அதன் தந்தங்கள் திருடப்பட்டிருந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில், தந்தங்களை திருடிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன் பேரில், பொம்மன் என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்த வனாத்துறையினர், இன்று அவரை கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன? வனப்பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, காப்புக்காட்டு பகுதியில் இருந்து ஒரு துர்நாற்றம் வீசியுள்ளது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது, 20 வயதுள்ள ஆண் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் இரு தந்தங்களும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இன்று வனத்துறையினரிடம் பிடிப்பட்ட பொம்மனிடம் இருந்து திருடப்பட்ட 2 தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், பொம்மனை கைது செய்த வனத்துறையினர், அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வன உயிரின குற்ற வழக்கு எண் 3-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். கைதான பொம்மன் மீது ஏற்கனவே தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பல்வேறு வன உயிரின குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:53 வழக்குகள்... தமிழகத்தை சேர்ந்த பிரபல குற்றவாளி கேரள சிறை வளாகத்தில் இருந்து தப்பியோட்டம்!