திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் ஆல் இந்தியா ஏ-கிரேட் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி கடந்த பிப்.29 ஆம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, குஜராத் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 20 அணிகளும் பங்கேற்று விளையாடின.
குறிப்பாக புரோ கபடி, யுவா கபடி மற்றும் தேசிய அளவிலான கபடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். பிப்.29 ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடைப்பெற்ற கபடி போட்டியின், இறுதி போட்டி நேற்று (மார்ச் 3) நடைப்பெற்றது. இதனை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் கர்நாடகா மாநில அணியும், பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் பேங்க் ஆஃப் பரோடோ அணி, கர்நாடகா அணியை வீழ்த்தி முதல்பரிசான 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது. அதேபோல், இரண்டாம் இடத்தைப் பிடித்த கர்நாடாக மாநில அணி 1 லட்சம் ரூபாயும் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
அதேபோல, பெண்கள் பிரிவில் நடைப்பெற்ற இறுதி போட்டியில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த சண்முகா மொமோரியல் வெண்ணிலா கபடி குழு அணியும், டெல்லியைச் சேர்ந்த திபெத் பார்டர் போலீஸ் அணியும் மோதியது.
இதில் டெல்லி போலீஸ் அணி, மொமோரியல் அணியை வீழ்த்தி முதல்பரிசான 1 லட்சம் ரூபாய் மற்றும் கோப்பையை வென்றது. இதனையடுத்து கோப்பையை வென்ற டெல்லி அணியினர் உற்சாகத்தில் நடனமாடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்த மொமோரியல் வெண்ணிலா கபடி குழு அணிக்கு 60 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் சாரதி குமார் ஆகியோர் வழங்கினர். நான்கு நாட்களாக நடந்த இந்த கபடி போட்டியைக் காண தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் சூர்யா!