கன்னியாகுமரி: குளச்சல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மரிய டெனில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலை குடியைச் சேர்ந்த நித்திய தயாளன், கலைதாஸ், அருண் தயாளன், வாலாதரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், பாசி பட்டிணத்தைச் சார்ந்த முனீஸ்வரன் ஆகியோர், 2023ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி ஈரான் நாட்டில் சையிது சவுது ஜாபரி என்பவரது விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்வதற்காக நாடு விட்டுச் சென்றுள்ளனர்.
கெஞ்சிய மீனவர்கள்: அங்கு சையிது சவுது ஜாபரி பேசியபடி மீனவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல், ஆனாலும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து மீன்பிடிக்கச் செல்வதற்கு மீனவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மீனவர்கள் தங்கள் குடும்பம் நாங்கள் பணம் அனுப்பாததால் பசியால் வாடி வருகிறது என்று சொல்லியும் சையிது, அவர்களது பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்துள்ளதாகத் தெரிகிறது.
குழந்தையை இழந்த மீனவர்: மேலும், அருண் தயாளன் என்ற மீனவரின் குழந்தை இறந்த போதும் கூட அவரையும் வீட்டுக்கு அனுப்பவில்லை எனவும், மீனவர்கள் சம்பளம் கேட்டால் அவர்களை அடிப்பது, பயமுறுத்துவது வீட்டுக்குச் செல்ல பாஸ்போர்ட் கேட்டாலும் கொலை செய்வேன் என மிரட்டி, கொத்தடிமைகளாக நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் எப்படியாவது சையிதுவின் பிடியிலிருந்து தப்ப வேண்டும் என திட்டமிட்டு, மீன் பிடிக்கச் செல்வது போல் அங்கிருந்து புறப்பட்டு கடல் மார்க்கமாக இந்தியா வந்துள்ளனர்.
நடுக்கடலில் தத்தளிப்பு: ஈரானில் இருந்து 14 நாட்கள், சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் படகில் பயணித்து, கேரளா கடலில் வந்த போது டீசல் தீர்ந்து கடலில் தத்தளித்துள்ளனர். பின்னர், குளச்சல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மரிய டெனில் என்ற மீனவர், தனது உறவினர்களை தொடர்பு கொண்டு சூழ்நிலையைத் தெரிவித்துள்ளார். உடனே குடும்பத்தினர் மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், படகில் டீசல் இல்லாமல் ஆறு மீனவர்கள் நடுகடலில் தத்தளிப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த கொச்சின் இந்தியக் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அவர்கள் வந்த ஈரான் நாட்டு விசைப்படகையும், 6 மீனவர்களையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், ஈரானில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த ஆறு மீனவர்களின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு கேரளா மாநிலம் கொச்சின் சென்று, அதிகாரிகளிடம் வேண்டுதல் வைத்து அவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படாமல் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.
திக் திக் பயணம்: இது குறித்து தப்பி வந்த மீனவர் நித்திய தயாளன் கூறும்போது, “ஈரானில் இருந்து கடலில் பட்டினி கிடந்து சாவதை விட, அருகில் உள்ள கத்தார் நாட்டில் சென்று அகதியாக தஞ்சம் அடைவோம் என தீர்மானித்து புறப்பட்டுச் சென்றோம். ஆனால், நடுக்கடலில் கத்தார் கடலோர காவல்படை மீனவர்களை தடுத்து நிறுத்தி, கத்தார் நாட்டுக்குள் நீங்கள் அகதியாக வரக் கூடாது என்று மிரட்டி திருப்பி அனுப்பினர்.
இதனால் மீண்டும் அச்சமடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் எப்படியாவது நாம் இந்தியாவுக்குச் சென்று சேருவோம் என்று நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகு மூலமாக இந்தியாவுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி கடல் வழியாக பயணம் செய்தோம். நான்காவது நாள் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டது. அந்த வழியாக வந்த ஒரு அமெரிக்கா நாட்டு அரசுக் கப்பல், எங்களுக்கு உணவும், முதலுதவி மருந்துகளும் கொடுத்து எங்கள் உயிரைக் காப்பாற்றினர்.
14 நாட்கள் கடல் வழியாக பயணம் செய்து, இறுதியில் இந்தியக் கடலுக்குள் கேரள ஆழ் கடல் பகுதியில் படகு வந்து சேர்ந்தபோது, படகில் இருந்த டீசல் முழுமையாக தீர்ந்து விட்டது. இதனால் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களைக் காப்பாற்றும்படி கூறினோம்.
எங்கள் குடும்பத்தினர் உடனே மீனவ அமைப்புகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். மீனவ அமைப்புகள் உடனடியாக இந்தியக் கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு, எங்களை மீட்க கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர், இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான 'அனுபவ்' என்ற கப்பல் மூலமாக நாங்கள் மீட்கப்பட்டு கொச்சியில் கரை சேர்ந்தோம்.
எங்களுக்கு உணவும், மருந்தும் அதிகாரிகள் தந்தனர். இந்தியக் கடலோர காவல் படையைச் சந்தித்த பின்பு தான் தாங்கள் உயிரோடு கரை சேருவோம் என்ற நம்பிக்கையே வந்தது” என்று உருக்கமாக கூறினார். மேலும், தப்பி வந்த இந்த மீனவர்கள் 14 நாட்களும் எந்த நாடுகளின் எல்லையைத் தொடாமல் சர்வதேச கடல் பகுதியில் கவனமாக படகை ஓட்டி வந்துள்ளனர். நித்திய தயாளன் படகு ஓட்டுநராக இருந்தாலும், ஒவ்வொரு மீனவரும் நான்கு மணி நேரத்திற்கு ஒருவர் என மாறி மாறி படகைச் செலுத்தி உள்ளனர்.
இறுதியாக இதுகுறித்து பேசிய மீனவர் நித்திய தயாளன், கடலோர காவல் படையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மிகவும் மென்மையாக மீனவர்களிடம் நடந்து கொண்டதாக தெரிவித்தார். மீனவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் கடல் மார்க்கமாக படகு மூலம் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவிற்குள் வந்ததால், அவர்கள் மீது கொச்சின் கடலோர காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மீனவர்களது குடும்பத்தினரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: காட்டிக்கொடுத்த குரல்வளை? - உடற்கூறாய்வு அறிக்கையால் சூடாகும் ஜெயக்குமார் வழக்கு! - Tirunelveli Jayakumar Case