தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில், அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை பொழுதில் திடீரென அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 6வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் தீப்பிடித்ததில் பெரும் புகை ஏற்பட்டுக் குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் சிக்கிய மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாரியப்பன் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி நேரில்சென்று, அவர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசின் நிதியுதவியாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அப்போது, தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது!