தேனி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, கம்பத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பிரசாரத்தில் பேசிய கனிமொழி எம்.பி, “மக்களை சந்திக்க இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு வரவில்லை. எத்தனை முறை இங்கு வந்தாலும் ஒரு வாக்கும் கிடைக்காது என்பதால் அவர் இங்கு வருவதில்லை. தமிழ்நாட்டில் தாமரை என்றும் மலராது. இனிமேல், இந்தியாவிலும் மலராது. சிறுபான்மையினர் மக்களின் சகோதரர்கள் நாங்கள் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறுகிறார்.
ஆனால், பாஜகவுடன் சேர்ந்து சிஏஏ சட்டத்திற்கு (CAA) வாக்களித்த போது, சிறுபான்மையினர் சகோதரர்களை மறந்து விட்டீர்களா? என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அதிமுகவும், பாஜகவும் தனித்தனி என்று நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார்கள். இருவருமே ஸ்டிக்கர். பாஜக பெரிய ஸ்டிக்கர், அதிமுக சின்ன ஸ்டிக்கர். லேடியா? மோடியா? என்று சவால்விட்டவர், ஜெயலலிதா. அவரின் படத்தை வைத்துக்கொண்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து பொதுமக்களை ஏமாற்றி வாக்கு கேட்கிறார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு டிடிவி தினகரன் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில், அவர் வழக்குகள் இன்றி சுத்தமானவராக மாறிவிட்டார். இந்தியா கூட்டணி (INDIA Alliance) ஆட்சிக்கு வந்ததும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 எனக் கொடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், விவசாய கடன் மற்றும் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே, பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு! - Arvind Kejriwal