சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் வரை உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடைய 24 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: விமானப் படை சாகச ஒத்திகை நிகழ்ச்சி: மெரினாவில் சீறிப்பாய்ந்த விமானங்கள்.. வியப்புடன் கண்டுகளித்த பொதுமக்கள்!
கைது செய்யப்பட்டவர்களில் சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகிய மூன்று பேர் ஜாமீன் கோரி ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடைபெற்று வருவதால், ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்