கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
16 ஆக உயர்ந்த உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சுரேஷ், சேகர், சுரேஷ், பிரவீன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா, ஆறுமுகம், தனக்கோடி, நாராயணசாமி, ராமு ஆகிய 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் உள்ள 60 பேரில், 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்கெட் சாராயம் விற்றவர் கைது: இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர்கள்: அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
கலெக்டர் பணியிடை மாற்றம்: இச்சம்பவத்தையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.பி. சஸ்பெண்ட்: மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அதோடு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும் உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.