மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்தர் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, இந்த ஆலய வரலாறு கூறுகிறது.
பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். மார்கண்டேயருக்கு என்றும் சிரஞ்சீவி என்ற வரத்தை இறைவன் தந்தார். பக்தன் மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் என்பதால் இது அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரதி சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற காரணங்களினால் இக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி கால சம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. எமதர்மன் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பு என்பதே இல்லாமல் போனதால் பூமியின் பாரத்தை தாங்கமுடியாத பூமாதேவி தன் வேதனையைத் தீர்க்கும்படி சிவபெருமானை பிரார்த்தித்து மீண்டும் எமனை உயிர்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் கால சம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீதியுலா நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீனம் 27 மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் - இன்று தொடங்கி ஆடி வரை அம்மனின் அரசாட்சி.. - Meenakshi Amman Pattabhishekam