சென்னை: தமிழக அரசு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
இதில் மகளிர் உரிமைத் தொகைக்காக தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அல்லது விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் கடந்த நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அமைச்சர்கள், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கூறினர். இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்து, தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, கலைஞர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்ட சிறப்புதிட்ட செயலாக்கத்துறை கொள்கைக் குறிப்பில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கலைஞர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024 ஆம் நிதியாண்டில் 8123.83 கோடி ரூபாய் ஒதுக்கீடும், 2024-25 ஆம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2024 மார்ச் 31 முடிய, முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச் சார்ந்த 14 ஆயிரத்து 723 மகளிர் உட்பட 15 இலட்சத்து 27 ஆயிரத்து 172 மகளிர் பயனடைந்து வருகின்றனர் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு - Hosur international airport