புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வந்தார். பின்னர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று பிம்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். மோடி பிரதமராக பதவியேற்பார் என்று ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. உண்மையில் நடக்கக் கூடியது என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி மீண்டு வருவாரா என்பதுதான் கேள்வியே தவிர, மீண்டும் வருவாரா என்பது ஒரு பிரச்னை அல்ல. தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடம் இல்லை. மணிப்பூர் மாநிலம் இந்தியாவிற்குள்தான் இருக்கிறது. அங்கே அவர் செல்வதற்குத் தயாராக இல்லை. ஆகவே, வடகிழக்கு மாநிலங்கள் அவருக்கு எதிராகவே உள்ளன.
காஷ்மீரில் எப்பொழுது தேர்தல் நடைபெறும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவர் நடத்துவோம் என்று சொல்கிறாரே தவிர, தேர்தல் நடத்துவதற்குத் தயாராக இல்லை. ஊடகங்கள் வாயிலாக சொல்லப்படும் கருத்துக்கணிப்புகள் உண்மையானவை அல்ல. அவர் மற்றவர்களை விலைக்கு வாங்குவோம், மிரட்டி ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைக்கிறார். அது வரும் காலங்களில் நடைபெறாது. மோடியின் பிம்பம் சரிந்து கொண்டே வருகிறது.
ஆகையால், மற்ற குறுக்கு வழிகளை அவர் தேடி வருகிறார். பாரத ரத்னா விருதை, அவர் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இந்த விருதை திறமை மற்றும் பெருமைக்காக அவர் கையாளவில்லை. ஏற்கனவே, 37 சதவீதம் பெற்றுதான் ஆட்சிக்கு வந்துள்ளார். தற்போது அனைத்து எதிர்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர். எனவே, மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
வாக்காளர்களை நம்ப முடியாவிட்டாலும், வரும் தேர்தலில் ராமனையே வேட்பாளராக நிறுத்துவது போல பிம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் சாதிக்கலாம் என்று நினைக்கிறார். அனைத்து மாநிலங்களிலும் உள்ள எதிர்கட்சிகள், பாஜகவிற்கு எதிராக ஒரு சூழலை தெளிவாக எடுத்துள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், அதிகமான இடங்களை எதிர்கட்சிகள் போட்டியிட்டு வெற்றி பெற்று, எதிர்கட்சிகள் ஆட்சியாக இருக்கக்கூடியது என்பதற்குத்தான் இந்த போட்டியே தவிர, வேறு எதற்கும் இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் இப்பொழுது காணாமல் போய்விட்டனர். எப்பொழுதும் கதவு திறந்தே இருக்கும் என்று அமித்ஷா கூறி வருகிறார். ஆனால், அந்த கூட்டணியில் இருந்தவர்கள் கூட்டணி கதவு மூடியே இருக்கிறது என்கின்றனர். அது மூடியே இருக்கிறதா அல்லது திறந்திருக்கிறதா என்பதில் அவர்களுக்கே குழப்பம் உள்ளது. மோடி சென்றால் மலர் மாலை போல ஓட்டுக்கள் வந்து விழும் என்பதை பொய்யாக்கியுள்ளது இமாச்சலப் பிரதேசம்.
எதார்த்த நிலை, உண்மை நிலை என்னவென்றால் மீண்டும் ஆட்சி, மோடிக்கு கிடையாது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். மக்களுக்கு விலைவாசி ஏற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை. பெண்களுக்கு குறிப்பாக, கிராமப் பகுதியில் உள்ளவர்களுக்கு கூட வேலை வாய்ப்பு இல்லை. சமூக நீதிக்கு வித்தியாசமான சூழல். அவர்கள் ஓடி வந்தாலும், நாடி வந்தாலும், தேடி வந்தாலும் ஜெயிக்கப் போறது என்னவோ எதிர்கட்சி ஆட்சிதான்.
கருத்துக்கணிப்புகளை பொதுவாக நாங்கள் ஏற்பதில்லை. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் முதலாளிகள் வைத்துள்ள ஊடகங்களே வெளியிடுகின்றன. அது கருத்து திணிப்பே தவிர, கருத்துக்கணிப்பு அல்ல. நாங்கள் தினசரி மக்களைச் சந்திக்கிறோம். அவருடைய காயங்கள் இன்னும் ஆற்றப்படவில்லை. கூட்டணி முடிவுகளை இன்னும் அறிவிக்காத நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.
மோடி உத்தரவாதம் என்றாலே மக்கள் சிரிக்கின்றனர். காரணம், அவர் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றாமல் இருப்பதே. இதுவரை கருத்துக்கணிப்புகள் வெற்றி பெற்றதில்லை. அதற்கு மாறாகவே முடிவுகள் வந்துள்ளது. நாங்கள் பேசுவது மக்கள் கணிப்பு. அவர்கள் சொல்வது கருத்து திணிப்பு” என்றார்.
தமிழகத்தில் தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் நடந்து வருகிறது என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கி.வீரமணி, தேர்தல் நேரத்தில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவது வாடிக்கைதான் என்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு இடம் ஒதுக்குவதில் திமுகவினரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. செய்திகளுக்குத்தான் பதிலளிக்க முடியும் என்றார்.
இதையும் படிங்க: “முதலில் கமல்ஹாசன் களத்திற்கு வரட்டும்" - வானதி சீனிவாசன்