கோயம்புத்தூர்: கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை தெற்கு தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA Alliance) செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப்பெரிய எழுச்சியைப் பார்க்க முடிகிறது. ஒதுங்கி இருந்தவர்கள் கூட அரசியல் மாற்றம் வேண்டும் என வெளியே வருகின்றனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, கோயம்புத்தூர் ஒரு புரட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
39 தொகுதிகளிலும் கூட என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்பதைக் களத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் இருந்து பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடி குறிப்பிட்ட 400 எம்பிக்களில் செல்வார்கள் என்றார்.
இதனையடுத்து பாஜககுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, அரசியலில் திமுக இருப்பதே ஒரு அவமானம். திமுக 1967-ல் ஆட்சிக்கு வர ஆரம்பித்ததோ, அப்போது இருந்தே விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, வாக்குக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது என குற்றம்சாட்டினார்.
இதனால்தான் தந்தை பெரியார் திமுகவை கடுமையாக எதிர்த்தார். இன்று தனக்கென்று அடையாளம் எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கின்றார். இவருக்கு பிரதமர் மோடியைப் பற்றி பேச தகுதி இல்லை.
கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை: எங்களைத் தேர்ந்தெடுத்த கோவைக்கு 'மெட்ரோ ரயில்' கொண்டு வருவோம். கோவை தொகுதிக்கு ரூ.830 கோடி ஏற்கனவே வந்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி பார்த்தேன். நாங்கள் சாமானிய மனிதர்கள் இதை எதிர்கொள்வோம். கோவையில் இருக்கும் பாலங்கள் கமிஷனுக்காக கட்டப்பட்டது.
பாலங்கள் மூன்றடுக்காகக் கட்டியிருக்கலாம். வேறு சிந்தனையில் கட்டி இருக்கலாம் எனவும்; ஆனால், எந்த சிந்தனையும் இல்லாமல் பாலங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது. இவர்களால் கோவையின் வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது. என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே, என்னுடைய பேச்சுதான் காரணம். இதனால்தான், என் மீது ரூ.1230 கோடி மான நஷ்ட வழக்குப் போட்டு இருக்கின்றனர்.
தருமபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார். அவர், பசுமை இயக்கத்திற்காக பணியாற்றியுள்ளார். சௌமியாவிற்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணமாகி அந்த குழந்தை இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
இந்தியா முழுவதும் 51 சதவிகித வாக்குகளைப் பாஜக பெறும். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும். கோவை அரசியல் களம் சிறப்பாக இருக்கிறது, வேட்புமனு தாக்கலுக்குப் பின்பு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடமாநில சுற்றுலா பயணிகளிடம் ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்! - Election Flying Squad