தூத்துக்குடி: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா பெரு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி புகழேந்தி, புதிய விடுதி அறையில் வைக்கப்பட்டிருந்த டிவியை அகற்ற உத்தரவிட்டார். கோவிலுக்கு வருபவர்கள் இங்கு தங்கும்போதும் கோவில் சிந்தனையுடன் தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில். இந்த கோயிலில் வருடத்திற்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக ஆவணி திருவிழா, கந்தசஷ்டி விழா, தைப்பூச திருவிழா என பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் மிக முக்கியமானதாக கந்த சஷ்டி விழா கருதப்படுகிறது.
நடந்து வரும் கந்தசஷ்டி விழா: இந்த கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் (நவ.2) முதல் நாள் யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகின்ற 7ஆம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமி கொலை வழக்கு: கணவன் மனைவி உட்பட ஆறு பேர் நீதிமன்ற காவலில் அடைப்பு!
திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த நீதிபதி: இந்த நிலையில் கந்தசஷ்டி விழாவின் இரண்டாவது நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார்.
கோயில் விடுதியில் டிவி தேவையில்லை: அவர் கந்தசஷ்டி விழாவிற்காக பக்தர்களுக்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட விடுதிகள் அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள விடுதிக்குள் சென்று பார்வையிட்ட நீதிபதி புகழேந்தி, விடுதி அறையில் வைக்கப்பட்டிருந்த டிவியை அகற்ற உத்தரவிட்டார். கோவிலுக்கு வருபவர்கள் இங்கு தங்கும்போதும் கோவில் சிந்தனையுடன் தான் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருடன் கோவில் அறங்காவலர் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் உடன் வந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்