மதுரை: மதுரை திருமங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்த ரவணப்பசாமி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னையும், எனது மனைவியையும் நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாக எனது மகன் வெங்கிடசாமி உறுதி அளித்ததால், எங்கள் பூர்வீக சொத்துகளை எனது மகனுக்கு தானமாக எழுதிக் கொடுத்தோம்.
ஆனால், அவரது உறுதிமொழியின்படி எங்களை கவனிக்க தவறிவிட்டார். கடந்த ஆண்டு என் மனைவி இறந்துவிட்டார். அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்கு கூட என் மகன் வரவில்லை. தற்போது அந்த நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி, என் மகன் விற்பனை செய்கிறார். எனவே, பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவருக்கு தானமாக வழங்கிய சொத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம், மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் (RDO) ரவணப்பசாமியை விசாரணைக்கு அழைத்தார்.
ஆனால், முறையாக கோட்டாட்சியர் விசாரணை செய்யாமல் அவருடைய உதவியாளரை வைத்து விசாரணை செய்து, ரவணப்பசாமியின் மகனுக்கு சாதகமாக ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கி உள்ளார். இது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட ரவணப்பசாமிக்கு எதிராகவும் உள்ளது.
எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின் படி, முறையாக விசாரணை செய்யாத வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெற்றோர் பாதுகாப்புச் சட்ட பிரிவின்படி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், உத்தரவுக்கு முரணாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவரது அலுவல உதவியாளர்கள் செயல்பட்டு உள்ளனர். எனவே, இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, மனு குறித்து வருவாய்த்துறை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: பே-டிஎம் மூலம் பணம் அனுப்புவதாக நூதன மோசடி.. மர்ம நபரிடம் ஏமாந்த வியாபாரி.. நீங்கள் உஷார்!