திருநெல்வேலி: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தென் தமிழக தலைமையகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் பாண்டியன், "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும் எனவும், மாஞ்சோலை மக்களை மலைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள் என்றும், தேயிலைத் தோட்ட நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக் கொண்டு ஆளுங்கட்சியினரே மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பரபரப்பு பேட்டி#tirunelveli #JohnPandian #TMMKParty #thirumavalavan #krishnaswamy #pressmeet #etvbharattamilnadu pic.twitter.com/R7Zj4PL7IX
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) July 20, 2024
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் எனவும், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், அதிகாரிகளை மாற்றினால் மட்டும் கொலைகள் நடக்காமல் இருக்காது எனவும், அதிகாரிகள் மாற்றத்திற்கு பின்னரும் தொடர் கொலைகள் நடந்து வருகிறதாக தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திமுக அரசு அமைந்த பிறகு மாற்றி விட்டதாக கூறினார். மேலும் தலைவர்களின் பாதுகாப்பு குறைபாடு இந்த அரசில் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களைக் கொலை செய்தால் பெயர் வாங்கி விடலாம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் சிலர் சுற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார். இதன் காரணமாக தனக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கிய தலைவர்களாக இருக்கும் சீமான், திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
எந்த கொலைக்கும் என்கவுண்டர் நடவடிக்கை தீர்வாகாது என்றும், என்கவுண்டர் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார். கொலைக்கு கொலைதான் தீர்வு என்றால் நீதிமன்றம் எதற்கு எனக் கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தின் வாயிலாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்ததால் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத நிலை உருவாகி உள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எடுத்த நடவடிக்கை குறித்தும், கொலை எதற்கு நடந்தது குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறினார். மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் சரியான தீர்வு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் பணியிடமாற்றம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் சாடல்