விருதுநகர்: திருச்சுழி அருகே மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள டீக்கடையின் முன்பு பொதுமக்கள் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, மதுரை - வாலிநோக்கம் நெடுஞ்சாலையில் சாயல்குடியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற பாஜக கொடி கட்டிய மகேந்திரா ஜீப், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து பொதுமக்கள் அலறி எடுத்துக் கொண்டு ஓடியுள்ளனர். அப்போது ஜீப் மோதி இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்த நிலையில், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அங்கும் இங்கும் தறிகெட்டு ஓடிய ஜீப், கடைசியாக ஒரு மின்கம்பத்தில் மோதி நின்றுள்ளது. இதனால் மின் கம்பம் முறிந்து மின்சார வயர் அறுந்து விழுந்தது. அப்போது உடனடியாக மின்சாரம் தடைபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.ரெட்டியபட்டி காவல் நிலைய போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் இராமநாதபுரம், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தப்பி ஓடிவர்களை உடனடியாக கைது செய்வோம் என உறுதி அளித்ததன் பெயரில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து (54), விவசாயிகளான விஜயராமன் (53) மற்றும் மூக்கையா (50) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
முன்னதாக இன்று அதிகாலை, கோயம்புத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி 30 பயணிகளுடன் அரசு விரைவுப் பேருந்து விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு விபத்துக்கள் அரங்கேறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்!