சென்னை: ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) அட்வான்ஸ் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் வேத் லகோதி 355 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சென்னை ஐஐடி, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 2024-25ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே 26ல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 200 பேர் எழுதினர். இதில் 48 ஆயிரத்து 248 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 964 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த மாணவர் வேத் லகோதி 360 மதிப்பெண்களுக்கு 355 பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் மும்பை மண்டலத்தைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ்குமார் பட்டேல் 360க்கு 332 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தேர்வு முடிவுகள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வினை எழுதுவதற்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 584 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 200 மாணவர்கள் தேர்வினை எழுதினர். இதில் 48 ஆயிரத்து 248 மாணவர்கள் தகுதிபெற்றனர். அவர்களில் மாணவர்கள் 40 ஆயிரத்து 284 பேரும், மாணவிகள் 7,964 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, சென்னை மண்டலத்தில் இருந்து 11 ஆயிரத்து 180 பேரும், டெல்லி மண்டலத்தில் 10,255 பேரும், மும்பை மண்டலத்தில் 9,480 பேரும், உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கி மண்டலத்தில் இருந்து 5,136 பேரும், கான்பூரில் இருந்து 4,928 பேரும், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மண்டலத்தில் இருந்து 4,811 பேரும், கவுகாத்தியில் இருந்து 2,458 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் பெயரில் போலிச் சான்று.. நிலத்தை விற்று பணத்துடன் பதுங்கிய மனைவி கைது!