விழுப்புரம்: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தொடங்கினார். கடந்த 27ஆம் தேதி ஞாயிறு கிழமை அன்று தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடந்தது.
இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு த.வெ.க கட்சியினர் தேர்வு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாடு நடைபெற பகுதியில் வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், தமிழன்னை மற்றும் தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆகியோரின் கட் அவுட்களுடன் விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டது மற்றும் அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும், மாநாடு மேடையில் விஜய் பேசியது பலதரப்பில் வரவேற்பையும், அதற்கு நிகராக எதிர்ப்புகளையும் பெற்று சமீபத்தில் பெரும் பேசுபொருளாக உள்ளது. இதற்கிடையில், மது அருந்திவிட்டு யாரும் மாநாட்டு திடலுக்குள் வரக்கூடாது என்று விஜய் அறிவுரை செய்திருந்த நிலையில், த.வெ.க மாநாட்டு மேடையில் சிலர் மது அருந்தியது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "ஒன்றிணைந்து செயல்படுவோம்" - நடிகர் அஜித்துக்கு அழைப்பு விடுத்த உதயநிதி!
இதுபோன்ற சூழலில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 195 மதுக்கடைகள் இயங்கும் நிலையில், சாதாரண நாட்களில் 4 கோடி ரூபாய் வரை மது விற்பனையாகி வருகிறது. ஆனால், த.வெ.க மாநாடு நடைபெற்ற அன்றைய தினம் மது விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, கடந்த 26ஆம் தேதி 4 கோடியே 69 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், மாநாடு நடைபெற்ற தினத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, சுமார் 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்